சென்னை, நவ. 18 –
வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 மற்றும் 18 இருதினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இது அதிகம் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி அதனை எதிர் கொள்ள மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் வளர்ச்சி துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 138, அசோக் பில்லர் பிரதான சாலையில் உள்ள குறுக்குப் பாலம் அருகே மழைநீர் வடிகாலில் மழையின் காரணமாக ஏற்பட்ட அடைப்புகள் சீர் செய்யப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வார்டு 132க்கு உட்பட்ட 18 மற்றும் 19 வது அவென்யூ, 100 அடி சாலை, வார்டு 134 க்கு உட்பட்ட சின்னராஜபிள்ளைத் தோட்டப் பகுதிகளில் உள்ள இரயில்வே குறுக்குப் பாலம், சுப்பிரமணிய நகர் 2வது தெரு, பரங்குசபுரம் மற்றும் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் தூர்வாரும் பணியிணையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏற்கனவே கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடந்த திடக்கழிவுகள் வண்டல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற மாநகராட்சின் சார்பில் தீவீர தூய்மைப் பணி கடந்த நவ 12 முதல் மேற் கொள்ளப்பட்டு நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த தூய்மைப்பணியின் மூலம் நாள் தோறும் சுமார் 5700 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் கையாளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக வண்டல்கள் சாலையின் வண்டல் வடிக்கட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகாலில் சென்று ஒரு சில இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதற்காக கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிக்கட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற் கொள்ள அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக நேற்று இரவு பெய்த மழைக்கு முன்பே தூர்வாரும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த வார மழையின் போது மழைநீர் தேங்கிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மாநகராட்சியின் 448 மோட்டார் பம்புகள், வாடகைக்கு 199 மோட்டர் பம்புகள், பிற துறைகளிலிருந்து பெறப் பட்ட 37 மோட்டார் பம்புகள் என மொத்தம் 684 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இதில் 100க்கும் அதிகமானவற்றில் அதிக திறன் கொண்ட 22 மோட்டார் பம்புகள் 50 க்கும் மேற்பட்டவைகளில் அதிக திறன் கொண்ட 28 மோட்டார் பம்புகள் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆய்வுகளின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் ஜி.வீரப்பன், மண்டல அலுவலர் எஸ்.ஜெய்பீம் உட்பட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.