கும்பகோணம், ஜூன். 23 –
இன்று கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இம் முகாமில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் நாச்சியார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமா சங்கர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஐவண்ணன் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் திரளான் அவ்வூர் மக்களும் பங்கேற்றனர்.
மேலும் இன்று நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், புதிய குடும்ப அட்டை, வேளாண்மை துறை மற்றும் உழவர் நலன் துறையில் மற்றும் மகளிர் குழு கடன், தனி நபர் கடன் என 592 பயனாளிகளுக்கு ரூபாய் 41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
இதில் சிபிஎம் சார்பில் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் வகையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்த வேண்டும் எனவும், ஊராட்சிகளில் உள்ள மக்கள் சார்ந்த அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், விவசாயிகளின் சார்பில் திருநறையூர் பகுதிகளில் தூர்வாரப்பட்ட போது வாய்க்கால்களில் உள்ள தண்ணீர் தேக்க மதகுகள் ஜேசிபி மூலம் உடைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக மதகு கட்டி தண்ணீர் தேக்கும் கூடிய அளவிற்கு மீண்டும் கட்டிக் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாச்சியார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள பயன்பாடு இல்லாத பழைய மருத்துவமனை இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து பள்ளிக்கு நிரந்தர உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட தனி நபர்கள், பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும்போது இங்கு வழங்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தி, துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பிவைத்து அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.