கும்பகோணம், ஜன. 18 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் இன்று (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம் கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டது.

சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்டதாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா பத்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தைப் பொங்கல் (ஜன. 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜன. 18)  தைப்பூசம் இன்று வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. வழக்கமாக தைப்பூசத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான முருகப் பக்தா்கள் வந்து செல்வார்கள் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் திரளான பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here