திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பி.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி பேசுகையில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும். மேலும் ஊராட்சிகளில் உள்ள புறம்போக்கு இடங்கள் கண்டறிந்து அந்த பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நட திட்டமிட வேண்டும். கொரோனா 3வது அலை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்கள் கொரோனாவிலிருந்து மீள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகள் விவரம் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டதோடு இந்த ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் புதியதாக எடுக்க வேண்டிய பணிகள் தேர்வு செய்யவும் விளக்கமளிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் மரம் கருணாநிதி, ஊராட்சிகளில் மரம் வளர்ப்பது குறித்து விளக்கி பேசிய அவர், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மரக்கன்றுகளையும் வழங்கினார். கூட்டத்தில் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, எஸ்.மணி, மருத்துவ அலுவலர் விக்னேஷ்குமார், கால்நடை மருத்துவர் அரிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேன்மொழி அரி, கோவிந்தராஜ், நாராயணன், சங்கர், உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !