கும்பகோணம், ஜன. 10 –

கும்பகோணம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக பா.ம.கவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலாளர் வெட்டிக் கொலை.செய்யப்பட்டார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே உள்ள மேலன்மேடு எனும் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் திருஞானசம்பந்தம் (51) மேலும் அவர் சோழபுரம் பா.ம.க., நகர துணை செயலாளராகவும், முன்னாள் பேரூராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் திருஞானசம்பந்தத்தின் தந்தையான பெரியசாமி மற்றொருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் சாகுபடி செய்து வந்துள்ளார். அவருக்குப் பிறகு அந்த நிலத்தில் திருஞானசம்பந்தம் சாகுபடி செய்து வந்த நிலையில், அந்நிலத்திற்கான உரிய குத்தகை தொகையை நிலத்தின் உரிமையாளருக்கு வழங்காமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்நில உரிமையாளர், தனது நிலத்தை ராஜேந்திரன் என்பவருக்கு சாகுபடி செய்துக்கொள்ள அதிகாரம் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜேந்திரன் என்பவர் அந்நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற போது, திருஞானசம்பந்தம் அதனைத் தடுத்துள்ளார்.

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் ராஜேந்திரனுக்கும், திருஞானசம்பந்தத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ராஜேந்திரன் அவரது மகன் உள்ளிட்ட சிலர் திருஞானசம்பந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் திருஞானசம்பந்தம் படுகாயமடைந்ததாகவும், மேலும் இது தொடர்பாக சோழபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனனை கைது செய்துள்ளனர்.

பின்னர், நிபந்தனை ஜாமீனில் ராஜேந்திரன் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அந்நிலப் பிரச்சனை தொடர்பாக அவர்கள் இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் இருந்த திருஞானசம்பந்தத்தை, ராஜேந்திரன் அரிவாளால், தலையில் வெட்டியதாகவும், அதில், திருஞானசம்பந்தம் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும். தெரிய வருகிறது. இதன் பின்னர் திருஞான சம்பந்தத்தை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் ராஜேந்திரன் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிய வருகிறது.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த சோழபரம் காவல்நிலைய போலீசார்,  திருஞானசம்பந்தத்தின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இக்கொலை சம்பந்தமாக உயிரிழந்த திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள், தெரிவிக்கும் போது, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here