உடுமலை:
கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி 130 கி.மீட்டர் இடம் பெயர்ந்து செழிப்பு மிகுந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடி மற்றும் கண்ணாடிப்புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 14 நாட்களாக முகாமிட்டுள்ளது. அங்கு கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், வெங்காய பயிர்கள் உள்ளிட்டவை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
நாட்டு உணவு அதிகளவில் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு வெளியேறாமல் தங்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சின்னதம்பியை காப்பு காடுகளில் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கலீம், சுயம்பு ஆகிய 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சின்னதம்பி கும்கியாக மாற்றப்படும் என்று பேசப்பட்டது. இதனையடுத்து சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சின்னதம்பியை கும்கியாக மாற்றத்தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் ஆஜராகி யானையை முகாமில் அடைப்பதே சரியான முடிவு என்று விளக்கம் அளித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறும்போது, சின்னதம்பி யானையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது குறித்தும், முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பதே சிறந்தது என்று வாதிட்டார்.
இந்நிலையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் யானை விவகாரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். வாகனத்தில் ஏற்றும்போது துன்புறுத்தக்கூடாது.
முக்கியமாக உயிர்சேதம் ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டும். யானை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதியில் கொண்டு விடுவதா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பு அளித்தனர்.
தீர்ப்பையடுத்து இன்று காலை சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. இன்று காலை சின்னதம்பி யானை சர்கார் கண்ணாடிபுதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சுற்றியது.
எனவே அங்கிருந்து வெளியேற்றி கிணறு, குளம், குட்டை இல்லாத சமவெளிப்பகுதிக்கு கும்கிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பலா உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ருசிக்க சின்னதம்பி யானை வரும்போது மயக்க ஊசி செலுத்தப்படும்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் லாரி நிறுத்தப்பட்டு அதன் அருகே சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. சாய்வு தளம் வழியாக கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றி டாப்சிலிப் யானை முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
முதற்கட்ட பணியில் 4 வனச்சரக அதிகாரிகள், 40 வன ஊழியர்கள், யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மயக்கவியல் நிபுணர் அசோகன் தயார் நிலையில் உள்ளனர். இன்று மாலைக்குள் யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் காட்சியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அவர்களை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.