சென்னை, டிச. 28 –

வாழ்க்கைக் குறிப்பு

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. அதனால் அவர் அதற்கு பின்பு மதுரையில் வளர்ந்தார்.

இந்நிலையில் சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த சினிமா மீதான  தாக்கத்தால் படிப்பில் அவர் ஆர்வம் காட்டாமல், அவரது தந்தை நடத்தி வந்த அரிசி அரவை மில்லில் தந்தைக்கு துணையாக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

திரையுலக வாழ்க்கை

கேப்டன் விஜயகாந்த்திற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாது இருந்து வந்த தாகத்தால் அவர் சென்னைக்கு வந்து, பல்வேறு கடின முயற்சிக்கு பின்பு 1979 ஆம் ஆண்டு வெளி வந்த அகல்விளக்கு எனும் திரைப்படத்தின் வாயிலாக சினிமாதுறையில் கால் பதித்து நடிகராக நுழைந்தார். முன்னதாக இயக்குநர் எம்.ஏ.காஜா விஜயராஜ் எனும் அவரது  இயற்பெயரை திரைப்படத்திற்காக விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்து அவரை திரைவுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்பு திரைப்படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக 156 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வலம் வந்தார். 1991 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் அவரது100 வது திரைப்படமாக அமைந்தது. அதற்கு பின்பு அவருக்கு கேப்டன் விஜயகாந்த் என்ற பெயரைக் கொண்டே  அனைவராலும் அழைக்கப்படு அப்பெயரே நிலைத்து நின்றது.

திருமண வாழ்க்கை

விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை மணம் முடித்தார் அத்தம்பதியர்களுக்கு, விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

 

அரசியல் வாழ்க்கை

தமிழ்நாட்டில் 1993 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்கள் அத்தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டனர் அதில் பெரும்பாலோர் வெற்றியும் பெற்றனர். அதனை பின்புலமாக வைத்து அவரும் அரசியிலில் இறங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வந்தார். அதனை அவ்வப்போது தெரிவித்தும் வந்தார் விஜயகாந்த்.

அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் எனும் புதிய கட்சியினை தொடங்கி அதன் நிறுவனத்தலைவராகவும் பொறுப்பேற்றார். அத்தோடு அவரது ரசிகர் மன்றத்தின் மாநிலத்தலைவராக இருந்த ராமு வசந்தனுக்கு பொதுச்செயலாளர் பதிவியினை வழங்கி அழகுப் பார்த்தார்.

அதனைத்தொடர்ந்து முதன் முறையாக தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டிட்டு வெற்றிப் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கால் பதித்து தனது அரசியல் வாழ்க்கையினை தொடர்ந்தார், அத்தேர்தலில் மற்றத் தொகுதிகளில் போட்டிட்ட அவரதுக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியினைத் தழுவினார்கள்.

பின்பு 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்  இணைந்து அத்தேர்தலில் ரிசிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். மேலும் அத்தேர்தலில் அவரது கட்சியின் அதிகப்படியான வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றதால், அவருக்கு எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைத்தது. அதனடிப்படையில் அவர் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை எதிர் கட்சித் தலைவராக பதவி வகித்தார்.

அதன் பின் தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் பல்வேறு கட்சிகளை இணைத்து முதலமைச்சர் வேட்பாளராக அவர் அக்கூட்டணியின் சார்பில் அறிவிக்கப்பட்டு உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவரும் அவர் சார்ந்த மக்கள் நலக்கூட்டணியைச் சார்ந்த அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

அதன் பின்பு அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு அவ்வப்போது அரசியல் பொதுக்கூட்டங்களிலும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு வந்தவர். மேலும் அவரது உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு நேற்று மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று மருத்து வசிகிச்சை பலனளிக்காமல் இன்று 28 டிசம்பர் 2023 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இந்நிலையில், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது இறுதி மரியாதை செலுத்தினார். உடன் அவருடனான நட்பை நினைவுப் படுத்தியும் அவரது தனித்திறன் மற்றும் மறைந்த திமுக தலைவர் கலைஞருடன் அவருக்கு இருந்த நட்பு மற்றும் பற்று போன்றவைகள் குறிந்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் மு.க. ஸ்டாலின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் … அன்பிற்கினிய நண்பரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here