பொன்னேரி, ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக அச்சுறுத்தியதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும் வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்பந்தம் வந்ததாகவும், அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஜெயலலிதா போல், தான் தைரியமாக முடிவெடுத்ததாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த முறை அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி என மக்களுக்காக தொகுதிக்காக உறுதியாக முடிவெடுத்ததாக பிரேமலதா கூறினார். எத்தனையோ நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், வங்கி கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும், பனங்காட்டு நரி சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார். எத்தனை சோதனைகள் வந்தாலும் கேப்டனும், அவரது துணைவியாரும் அஞ்சுபவர்கள் கிடையாது என்றார்.

எனவே ஆளும் பாஜகவிற்கும், திமுகவிற்கும் இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்றார். இது ராசியான மக்கள் விரும்பும் தமிழ்நாடே போற்றும் வெற்றி கூட்டணி என்றார்.

மேலும் பாமக இருந்திருந்தால் பிற சமூதாய வாக்குகள் கிடைக்காது எனவும், பாஜக இருந்திருந்தால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது எனவும், அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் ஏதோ கடவுள் புண்ணியத்திலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்கள் ஆசிர்வாதத்தோடு அவர்களாகவே வெளியே சென்று விட்டார்கள் என தெரிவித்தார். அதிமுக, தேமுதிக வெற்றி கூட்டணி எனவும் மகத்தான கூட்டணி என்றார். அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு முன்பு வரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்த நிலையில் தற்போது அதிமுக-தேமுதிக கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வெளிவருவதாகவும் பிரேமலதா கூறினார்.

மேலும் தமிழ்நாட்டு மக்கள் டாஸ்மாக் கடைகளாலும், கஞ்சா விற்பனையாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார். தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்ட பிரேமலதா விஜயகாந்த் திரைப்பட வசனமான துளசி கூட வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது என்று கூறிய போது அங்கிருந்த தேமுதிகவினர் ஆரவாரம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here