மீஞ்சூர், மார்ச். 30 –
அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் உரிமைக்குரல் முழக்கங்ங்களை எழுப்பினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டு, இங்கு நிலக்கரியை எரியூட்டி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நிலக்கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, பராமரிப்பு பிரிவு, மின் உற்பத்தி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. அதில், சுமார் 700க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலையில் தொழிற் சாலையின் நுழைவு வாயில் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறுகையில் அனல் மின் நிலைய நிர்வாகம், மற்றும் மின்வாரியமும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்காமல் இருந்து வருகிறது எனவும், இந்த கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு செல்வதின் மூலம் தமிழ்நாடு அரசு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வு தரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மேலும், நிர்வாக தரப்பினை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் என்று கூட அங்கீகரிக்கப்படாமல் தினக்கூலிகளாக வகைப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 600ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு விதிகளை பின்பற்றாமல் 300 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், குற்றம் சாட்டினார்கள். உடனடியாக அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் போனஸ் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான வழியாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைப் பெறுவதாக தொழிலார்கள் தெரிவித்தனர்.