புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் புதுச்சேரியில் மட்டும் 739 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குபதிவானது துவங்க மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
இந்நிலையில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் அனுப்பும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள 2 தொழில்நுட்ப கல்லூரிகளில் வைக்கப் பட்டிருந்த வாக்குபதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோந்துங்கன் நேரில் சென்று பார்வையிட்டார். மொத்தம் 2,587 வாக்கு இயந்திரங்களும்,
1323 விவிபேட் இயந்திரம் 150 வாகனங்களில் எடுத்துச்செல்லப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் அனைத்தும் போலீசார் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு செல்கின்றன. இதனிடையே வாக்குபதிவு எந்திரங்களை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த
தேர்தல் அலுவலர் பச்சையப்பன் (50) என்பவருக்கு திடீரென வலிப்பு வந்து மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மருத்துவர்கள் குழு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




















