மீஞ்சூர், டிச.21 –

மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையினால் சுற்றுச்சூழல் மாசுஅடைவதாக குற்றம் சாட்டி அதனை சீர்படுத்த முன்வராமல் காலம் தாழ்த்தும் நெடுஞ்சாலை துறை கண்டனம் தெரிவித்தும், மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மீஞ்சூர் – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், அதானி துறைமுகம், பெட்ரோலிய நிறுவனங்கள், எரிவாயு முனையம் என பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்குகளை கையாளும் ஆயிரக்கணக்கான லாரிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வோர் என பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் தற்காலிகமாக சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் ஜல்லி கற்களை கொட்டி சீரமைக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 16 கோடி ரூபாயில் 8, மாதங்களுக்குள் சாலை சீரமைத்து தரப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மழை ஓய்ந்த நிலையில் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லியில் இருந்து புழுதி பறந்து சுற்றுச் சூழல் மாசுபடுவதகவும், அதனால் அச்சாலை பயனாளிகள் மற்றும் அச்சாலையோர குடியிருப்பு வாசிகள் மற்றும் சிறார் முதல் முதியவர்கள், உடல்நலம் பாதிப்பக்கப்பட்டோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடுமையான சுவாச மற்றும் சரும நோய்களுக்கு உள்ளாவதாக குற்றம் தெரிவிக்கின்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்.

மேலும், அப்பகுதி வாழ் குடியிருப்புவாசிகளின் வீடுகளில் உள்ள உணவு, குடிநீர் என அனைத்திலும் சாலையில் இருந்து வரும் மண் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து, சுற்றுப்பகுதிகளில் 5 பள்ளிகள் உள்ளதாகவும், சுமார் 4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும் அக் குழந்தைகளும் சுகாதார சீர்கேடுக்கு உள்ளாவதாகவும், அதனால் அச் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் வியாபாரிகளிடம் அச்சாலையை புதிதாக அமைக்க நிதி ஒதுக்கி இருப்பதாகவும், அப்பணி துவங்கும் வரை சாலை இருபுறமும் தண்ணீர் தெளித்து தூசி பறக்காமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள்  சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும், கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here