திருவாரூர், ஆக. 05 –

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அடியமக்கலம் ஊராட்சியின் தலைவராக திமுகவை சார்ந்த கஸ்தூரி வரதராஜன் என்பவர்  உள்ளார். இந்நிலையில் அவ்வூராட்சி பகுதியில் உள்ள 12 வது வார்டில் பல மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளதாகவும், அதுக்குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்ததாகவும், தெரிய வருகிறது. அப்போது அவர் எனக்கு ஓட்டுப்போடாத உங்களுக்கு நான் ஏன் செய்ய வேண்டுமெனவும், மேலும்  உங்கள் தேவைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என அவ்வூராட்சி தலைவர் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ்வார்டில், வசித்து வரும் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடி தண்ணீர் இல்லாமல் கடந்த ஒரு மாதமாக மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், மேலும் குடிதண்ணீருக்குகாக அவ்வூராட்சிக்குட்பட்ட மற்ற வார்டுகளுக்கு அம்மக்கள் தண்ணீர் பிடிக்க சென்றால், அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பவதாகவும் அவர்கள் மேலும்  புகார் தெரிவிக்கின்றனர்.

அதனால் குடி நீர் தேவைக்காக தொடர்ந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருவதாகவும், அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தங்கள் குடும்பத்தில், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகள் என அனைவரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி சரியான நேரத்தில் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியதால், இன்று 12 வார்டு மக்கள் ஒன்றாக திரண்டு அவ்வூராட்சி தலைவரின் பொறுப்பற்றச் செயலைக் கண்டித்து திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்ற இடத்தில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து, திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் அச்சாலையில் வெகு நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அத்தகவலறிந்து அங்கு வந்த காவலதுறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரசப்பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் ஆவேசமாக அவர்களிடம் யாருக்கு வாக்களிப்பதென்பது அவரவர் உரிமையெனவும் மேலும் அதற்கு காரணம் கற்பித்து பொதுப்பிரச்சினைகளை புறக்கணிப்பதென்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி உறுப்பினருக்கு அழகல்ல என அவர்கள் தெரிவித்தனர்.

உடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் இதனை அரசியல் பிரச்சினையாக திசை திருப்ப வேண்டாம் என எடுத்துக் கூறியும், இப்பிரச்சினைக் குறித்து தூறைச்சார்ந்த அலுவலர்களிடம் பேசி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்த உறுதியினையேற்று போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் அப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் தெரிவிக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துக்கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் தேவையற்ற வார்த்தைகளை மக்களிடம் பயன் படுத்தக் கூடாதெனவும் அவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

உண்மைதான் இதனால் பொது அமைதி மற்றும் அரசு அலுவலர்களுக்கு வீண் கால விரயமும், கட்சி மற்றும் ஆட்சிக்கு அவப் பெயரும் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும் என்பது திண்ணமே,  தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு … என்ற பெருந்தகை வள்ளுவரின் குறளை நினைவில் கொண்டு அங்கிருந்து நாமும் கிளம்பினோம் …

செய்தி சேகரிப்பு ஆரூர் நாகராஜன் … திருவாரூர் மாவட்டச் செய்தியாளர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here