கும்மிடிப்பூண்டி, டிச. 02 –
போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அரசு இப்பிரச்சினைக் குறித்து கவனம் கொண்டு, கூடுதலாக இப்பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுமா என்றவாறு கேள்விகளையும், கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிபாளையம், ஆத்துப்பாக்கம், வழுதிகை மேடு, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும். மாணவ மாணவிகளும். பொன்னேரி பணிமனையில் இருந்து இயக்கப்படும் தடம் என் டி 43, அரசு பேருந்து மூலம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி மார்க்கமாக வந்து செல்கின்றனர்,
இந்த நிலையில் அப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் தடம் என் 557-A மாநகர பேருந்து காலதாமதமாக வந்து செல்வதால் போதிய பேருந்து வசதி இல்லாததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்றவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக இத்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் படியில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகள், உயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதங்களை எழுத வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திவுள்ளனர்.