ஆரணி, ஆக. 21 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு ( 26 ) மேலும் இவர் அப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
அதனைத்தொடர்ந்து அன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல் வெளிக்கு மோகன் பாபு சென்றுள்ளார்.
மனமழையின் காரணமாக அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது எதிர்பாரமல் மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அங்கு மயங்கிய நிலையில் மோகன்பாபு இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மோகன்பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அச்சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில இந்த கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக போடப்பட்ட மின் கம்பிகள் பல பகுதிகளில் இருந்து ஒட்டு போட்டு காணப்படுவதாகவும், இதுப் போன்ற ஒயர்கள் வயல் பகுதிகளிலும் கிராமத்திலும் உள்ளதாகவும், இந்த ஒயர்களை மாற்ற பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். இது மட்டுமல்லாமல் பல இடங்களில் பழுதடைந்து சிமெண்ட் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த படி மின்கம்பங்கள் உள்ளதாகவும், அவைகள் அனைத்தையும் மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மேலும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணத்தினால் அடிக்கடி மழை காற்று வரும்போது எல்லாம் மின்கம்பிகள் அறுந்து விழுந்து தெரியாமல் ஆடு, மாடுகள் மின் ஒயர்களை மிதித்து தொடர்ந்து அப்பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
எனவே இது போன்ற உயிரிழப்புகள் மேலும் நிகழாமல தடுத்திடும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் பழுதடைந்து இருக்கும் மின் வயர்கள் மற்றும் மின் கம்பங்களை விரைந்து மாற்றிட வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.