கும்பகோணம், டிச. 27 –
தஞ்சை மாவட்டம், கும்பகோண மாநகரில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஆருத்ரா தரிசனமாகும். அந்நாளில் சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாளாக அது கொண்டாடப்படுகிறது. மேலும் அது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதையே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப் படுகிறது.
இப்புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரம் என பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது.
மேலும் பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு திரவிய பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 36 விதமான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து புனிதநீர் நிரம்பிய கடநீரை கொண்டு கட அபிஷேகமும் நடைபெற்ற பிறகு சிறப்பு அலங்காரத்தில் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. அந் நிகழ்வின் போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.