திருவாரூர், ஜன. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே கூத்தாநல்லூர் பொதக்குடியை சேர்ந்தவர் சுஜாதா இவர் மன்னார்குடி வட்ட செவலக்காரன் ஊராட்சியில் சுருதி டவுன் என்ற பெயரில் அமைந்துள்ள மனைப்பிரிவில் ஒரு மனையினை 2 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்து அதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 500 ரூபாய் முன்பணமாக செலுத்தி மீதி பணமான ஒரு லட்சத்தையும் பின்னர் செலுத்திய நிலையில் அவரது பெயரில் மனையினை கிரயம் செய்து கொடுக்காத நிறுவனத்திடம் கேட்ட பொழுது அவர்கள் சரியான காரணம் சொல்லாமல் காலம் தாழ்த்தியதால் சுஜாதா திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது புகாரை விசாரித்து வந்த நீதிமன்றம் உடனடியாக அவருக்கு அந்த மனையினை பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக பத்தாயிரம் ரூபாயும் செலுத்த சம்பந்தப்பட்ட புரமோட்டர்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும், அந்தத் தொகையினை உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் மாவட்ட குறைவு ஆணைய தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமிமேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
                
		




















