கும்பகோணம், ஆக. 03 –
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக வந்த சரக்கு ரயில், மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது.
நேற்று மாலை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக 21 பெட்டிகளுடன் வந்த சரக்கு ரயில் நேற்று மாலை 5 மணி அளவில் கும்பகோணம் ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில், ரயிலில் மாடு அடிபட்டுள்ளது.
மாடு அடிபட்ட நிலையில் தொடர்ந்து ஓடிய ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மாடு அடிபட்ட பெட்டியில் இருந்து கடைசியாக உள்ள 5 பெட்டிகள் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கடைசி பெட்டியில் இருந்த கார்டு, இஞ்சின் ஓட்டுனருக்கு தகவல் தரவே, ரயில் நிறுத்தப்பட்டு மீண்டும் பின்னோக்கி வந்து துண்டிக்கப்பட்ட ஐந்து பெட்டிகளை இணைத்துக் கொண்டு 30 நிமிட தாமதமாக பின்பு மீண்டும் மயிலாடுதுறைக்கு புறப்பட்டது.