கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 அடி உயரமுள்ள கம்பீர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவினை உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது முழுமுதற் கடவுளான விநாயகர் ஒருவரே என்பதாகும்.
அச்சிறப்புமிக்க விழா நாடு முழுவதும் வரும் 31ம் தேதி (புதன்கிழமை) கொண்டாப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் வீடு மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர், அச்சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் பழைய பாலக்கரையில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை கம்பீர சுதந்திர விநாயகர் சிலை மற்றும் ராஜவிநாயகர் சிலையினை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனையுடன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மாநகராட்சி மேயர் சரவணன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலா மாவட்ட தலைவர் ரவி, நகரத் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரதிஷ்டை செய்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாநில பொதுச் செயலாளர் பாலா கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உட்கோட்ட பகுதிகளில் இன்றைய தினம் 14 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவும், வருகின்ற ஒன்றாம் தேதி விநாயகர் சிலைகள் காவிரி, வீரசோழன் ஆற்றில் விஜர்சனம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.