வாஷிங்டன்:
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் அலபாமா. இங்கு நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி தாக்கியது.
மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில் அலபாமா மாகாணம் பந்தாடப்பட்டது. அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
குறிப்பாக லீ கவுண்டி மற்றும் பெவுரேகார்டு ஆகிய நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகின. சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.
பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. நெடுஞ்சாலைகளில் இருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நொறுங்கிவிழுந்தன. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
சூறாவளி காற்றில் சிக்கி ஏராளமான மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.
காற்றின் வேகத்துக்கு செல்போன் கோபுரங்களும் தப்பவில்லை. அடுத்தடுத்து பல செல்போன் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
சூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் இதுவரை 23 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஜார்ஜியா, புளோரிடா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களையும் சூறாவளி தாக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூறாவளியில் சிக்கி பலியான அலபாமா மக்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில், “அலபாமா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். சூறாவளியால் உயிர்இழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.