சென்னை:

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீஸ்துறையின் ‘3-வது கண்’ என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட 199 சாலைகளில் 45 ஆயிரத்து 594 மீட்டர்களில் ஒவ்வொரு 50 மீட்டருக்கு ஒரு கேமராவும், 511 சாலை சந்திப்புகளில் 520 கேமராக்கள், முக்கியமான 16 சாலை சந்திப்புகளில் 112 கேமராக்கள் என மொத்தம் 1,556 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டன.

இந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் போலீஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் வரவேற்று பேசினார். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

குற்றச்சம்பவங்களை வேகமாக துப்புதுலக்கவும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தான் காரணம்.

கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பிற்கான முதலீடு. இதை செலவு என்று பார்க்க கூடாது. எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளிலும் தெருக்களை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான உணர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here