பாகல்பூர்:
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.
ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.
இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தன. பஸ்ஸில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த தற்கொலை தாக்குதலில் 40 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த கொடூரமான தாக்குதலில் பிகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ரத்தன் தாகூர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது தந்தை நேற்று இரவு ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், ‘என் மகன் பயங்கரவாத தாக்குதலில் இறந்து விட்டான். அவனை நான் என் இந்திய தாயின் சேவைக்காக தியாகம் செய்து விட்டேன். என் மற்றொரு மகனையும் நாட்டிற்காக போராட ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன். நடந்த இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்’ என உணர்ச்சி மிகுந்த தன் கோபத்தினை வெளிப்படுத்தினார்.
ஒரு மகனை பறிகொடுத்தபோதும், மற்றொரு மகனை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்ப நினைக்கும் அவரது தேசப்பற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.