வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 2003ம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் அனுப்பியது.
இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஆபர்ச்சுனிட்டி ரோவர் பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் 7 மாதங்களுக்கு முன்பு இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய அந்த விண்கலம் புயலுக்கு பிறகு காணாமல் போனது. இந்த ரோவர் எங்குள்ளது என தெரியாமல் நாசா விஞ்ஞானிகள் குழப்பத்தில் மூழ்கினர்.
ஆனால் புயலின் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது, ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதனுடைய சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ரோவரின் ஒரு பாகம் மட்டும் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.