புதுச்சேரி, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது…
டாடா ஐபிஎல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டின் நேரலை நிகழ்வுகளை ஃபேன்ஸ் பார்க் என்ற வகையில் முக்கிய நகரங்களில் நேரடியாக பெரிய டிஜிட்டல் திரைகள் மூலம் ஒளிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க் நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது
எனவும் மேலும் வருகின்ற நான்காம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்ற போட்டி மாலை 6:30 மணி அளவிலும், ஐந்தாம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளும் அதேப் போன்று லக்னோ சூப்பர் கெயின்ட் மற்றும் கொல்கத்தா நைட் பேர்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தையும் ஞாயிற்றுக்கிழமை 2:30 மணி அளவில் கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் உணர்வோடு பெரிய டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்ப உள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த கிரிக்கெட் போட்டிகளின் நேரலையை காண்பதற்கு கட்டண ஏதுமில்லை எனவும் மேலும் அதில் 50 நகரங்களில் இருந்து வெறித்தனமான கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்று தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஐபிஎல் ஃபேன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இசை, வணிகப் பொருட்கள், உணவுக் கடைகள், பானங்கள் மற்றும் ஐபிஎல்லின் அதிகாரபூர்வ ஸ்பான்ஸர்களின் சில வேடிக்கை செயல்கள் போன்றவைகள் இந்த நேரடி காட்சியின் போது இடம் பெறும் என்றார்.