தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வெப்ப அலை கடுமையாக இருப்பதால். வாழை மரங்கள் வெப்பம் தாங்காமல் தாரோடு முறிந்து சாய்ந்து விழுந்து வருகிறது. மேலும். இலைகள் கருகி சருகாக தொங்குகிறது. அதனால் ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் செலவு செய்து, விவசாயிகள் வைகாசி, ஆனி மாதங்கள் முகூர்த்த நாளுக்கு வாழை மரங்கள் வெட்ட தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விட்டதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 20 லட்சம் வாழை இலைகள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இலை கருகி சருகாக உள்ளதால் ஏற்றுமதி 8 லட்சமாக குறைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கூலி கொடுக்கக் கூட முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்படைந்தோம். இந்த ஆண்டு வெப்பத்தால் மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக வாழை விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார். வெப்ப அலை மனிதனை மட்டும் பாதிக்கவில்லை விலங்குகள், தாவரங்களையும் பாதித்து வருகிறது.




















