தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து அத்தகவலறிந்து இறந்தவரின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தஞ்சை காவேரி நகர் பகுதியில் குறிஞ்சி மெட்ரோ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. மேலும் தஞ்சையில் மூன்று கிளைகளை கொண்ட அப் பிரபலமான கடையில், ஒரத்தநாடு நார்த் தேவன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த கருணாநிதி (57) என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்தவர், திங்கள்கிழமையான நேற்று முன்தினம் 15 ஆம் தேதி வீட்டிற்கு செல்லவில்லை, என தெரியவருகிறது. இந்நிலையில் சந்தேகம் அடைந்த கருணாநிதியின் மனைவி மற்றும் மகன் சூப்பர் மார்க்கெட் மேலாளரிடம் 15 ஆம் தேதி பிற்பகல் வந்து விசாரித்து உள்ளனர்.
அதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர் வீட்டிற்கு அவர் சென்று விட்டார் என கூறியதாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் வரை கருணாநிதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மீண்டும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர்.
அப்போதும் கடை மேலாளர் உரிய பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடை வாசல் முன்பு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றதால் பதற்றமான கருணாநிதி உறவினர்கள் கடைக்குள் சென்று ஒவ்வொரு இடமாக தேடி பார்த்துள்ளனர்.
அப்போது, கழிவறைக்குள் கருணாநிதி சடலமாக கிடந்ததை கண்ட உறவினர்கள் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டனர். மனைவி மகள் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கருணாநிதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கடை கழிவறைக்குள் மர்மமான முறையில் இரவு காவலாளி சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.























