காஞ்சிபுரம், ஏப். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்ப உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 47.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப் பணத்தினை வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கானவாக்குப்பதிவு  நடைபெற இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனைகளை தேர்தல் பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் கோமாளா தலைமையிலான பறக்கும் படையினர் குழுவினர் காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி தடுத்து வாகன சோதனை மேற்கொண்டனர்.

அந்த வாகனத்தில் வந்த வந்தவாசி பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர்,  உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி 47 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம் வைத்திருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.

பணம் எடுத்துச் செல்வதற்கான எவ்வித ஆவணங்களும் முறையாக இல்லாததால் பறக்கும் படை குழுவினர் ரொக்கப் பணம் முழுவதையும் பறிமுதல் செய்து கொண்டு வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியருமான கலைவாணியிடம் ஒப்படைத்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் தனியார் ஏடிஎம் ( இந்தியா ஓன்) மையங்களுக்கு  பணம்  நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வந்தவாசியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரப்பட்டதாகும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் மாலை ஆறு மணிக்கு மேல் எந்த ஏடிஎம் மையங்களுக்கும் பணம் நிரப்ப எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால் ரொக்க பணத்தை  கருவூலத்தில் ஒப்படைப்பதாகவும், அதன்பின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நேரத்தில் 47 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here