பட்டுக்கோட்டை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி அப்பகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து தனது பரப்புரை மேற் கொண்டார் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கவும், பட்டுக்கோட்டை ரயில்வே தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தை துவக்கவும், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை முன்னெடுத்து அவர் தனது பரப்புரையை மேற் கொண்டார்.
பட்டுக்கோட்டையில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் பட்டுக்கோட்டை ரயில் தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் போக்குவரத்து துவங்கவும் அதே போல பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ரயில்வே தடத்திற்கான பணிகளை விரைந்து முடிக்கவும் மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தூண்டில் வளைவு மீன் பிடித் துறைமுகமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார் .
அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளை அதிமுக ஆட்சியின் போது விட்டு கொடுத்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டை வைத்த அவர் உத்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் தமிழ்நாட்டிற்கு மட்டும் குறைந்த அளவு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம் எல் ஏ அசோக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















