கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
மேலும்அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை குதிரை வாகனம், யானை வாகனத்தில் செல்வ மகாகாளி அம்மன், பால் குளத்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
அதில் ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வீட்டுக்கு வீடு கெடா வெட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முன்னோட்டம்- பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது.
அதில் உடையாளூரின் மையப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு அம்மன் வாகனத்தை சுமந்து முன்னும், பின்னும் ஓடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.