திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப் பட்ட பக்தர்கள் மனமுருகி மகா மாரியம்மனிடம் உயிர்ப்பிச்சை கேட்டு வேண்டுவதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அம்மனிடம் வேண்டி அப்பிரார்த்தனை நிறைவேறும் பக்தரகள் அக் கோவிலுக்கு நேரில் வந்து பாடை காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள் என்கின்றார்கள் அவ்வூர் மக்கள்.
வலங்கைமானில் அருள் பாலித்து வரும் பாடை கட்டி ஸ்ரீ சீதாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.. இந்த வருடமும் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் இறுதி வெள்ளி கிழமை அன்று பூச்சொரிதல் விழாவில் தொடங்கி, பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதலும் அதைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய ஞாயிறு கிழமை திருவிழாவின் தொடக்க நிகழ்வும் நடைபெறுகிறது.
பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு கிழமையான இன்று முக்கிய விழாவான பாடைகாவடி திருவிழாவான பாடை கட்டி தூக்கும் பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக இங்கு செலுத்தப்படும் நேர்த்திக்கடன் ஆனது வேறு எங்கெங்கும் காணமுடியாதபடி, வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது.
அதாவது சகல விதமான நோயினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் பூரண நலம் பெற வேண்டி பாடைகட்டி ஸ்ரீ மகா மாரியம்மனை வேண்டி கொள்கின்றனர்.
பக்தர்களின் உடல் பூரண நலம் பெற்றவுடன் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழாவில் கலந்து கொண்டு, பாடைகாவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
நோயிலிருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைத்து, நெற்றியில் திருநீறு பூசி, பச்சை தென்னங்கீற்றில் செய்த பாடையில் படுக்க வைத்து இறந்தவர்களுக்கு எப்படி இறுதி சடங்குகள் நடக்குமோ அதை போன்று அவர்களுக்கு, அவர்களது உறவினர்கள் முன்னிலையில் பாடையில் படுக்க வைத்து கண்களை கட்டி,கால்களை கட்டி, வாயில் வாய்க்கரிசியை போட்டு, அவர்களது உறவினர்கள் நான்கு பேர் பாடையை சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வருகின்றனர். பின்னர் கோவில் பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீர் பூசி அவரை எழச்செய்வார். அதுமட்டுமின்றி குழந்தைகள் இல்லாதவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டு, பூரண குணமடைந்தவுடன் தொட்டில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அவரவர்களின் வழக்கப்படி காவடியானது ரதக்காவடி, பறக்கும் காவடி, அலகுக்காவடி, பக்க அலகுக்காவடி,பால் அலகுக்காவடி என நூற்றுக்கணக்கான பக்தர்கள் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இவ்விழாவினை காண தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுகின்றனர்.




























