காஞ்சிபுரம், மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு வந்து 18 கிலோ தங்க நகைகளுக்கும் 100 கிலோ வெள்ளி பொருட்களுக்கும் உரிய முறையான ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். உரிய ஆவணங்களைக் எடுத்து வந்து காட்டும் வரை அவைகள் அனைத்தையும் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்களும், பிற பரிசுப் பொருட்களை எடுத்துச் சொல்லும் வாகனங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அப்போது உரிய மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் யாராவது பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்கிறார்களா என மிகுந்த கவனத்துடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜி ஆர் டி நகைக்கடையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, ஓ.எம்.ஆர். பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் வாகனத்தை காஞ்சிபுரம் அருகே வையாவூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அவ் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து உரிய ஆவணங்கள் உள்ளதா என மாவட்ட வருவாய் துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைப் போல வாலாஜாபாத் பகுதியிலும் டாடா, ஜிஆர்டி உள்ளிட்ட பல்வேறு நகைக் கடை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சப்ளை செய்ய கொண்டு சென்ற வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வையாவூரில் பறிமுதல் செய்த வாகனத்தில் 10 கிலோ தங்க நகைகளும் 58 கிலோ வெள்ளி நகைகளும், வாலாஜாபாத்தில் பறிமுதல் செய்த வாகனத்தில் 8 கிலோ தங்க நகைகளும் 42 கிலோ வெள்ளி நகைகளும் என 18 கிலோ தங்க நகைகளும் 100 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்களை காட்டி பெற்றுச் செல்லும் வரை கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற இரு வேறு இடங்களில் தங்க நகைகளை கொண்டு சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here