திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம்,
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி விலையில்லா வீட்டு மனை பட்டாவினை 1674 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் அவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், திருத்தணி கோட்டாட்சியர் தீபா, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






















