மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக புதி கட்டடத்தை, நாளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரிடையாக வந்து காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்து நலத்திட்ட பணிகளை வழங்க உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பிரம்மாண்ட அரங்கில் நடைபெறும் நிறைவு கட்ட பணிகளை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் கூறியபோது மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ.655.44 கோடி மதிப்பீட்டில் 12, 653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் கரங்களால் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் 71 நிறைவடைந்த கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்தெந்த துறைகளுக்கான அலுவலகங்கள் இடம்பெறும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எல்லா தகவலையும் இன்று கேட்காதீர்கள் பா..! , நாளை மேடையில் பேசுவதற்கு எனக்கு கண்டன்ட் வேண்டாமா என நகைச்சுவையாக பதில் அளித்தார். முதல்வர் வருகையை ஒட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.





















