திருவள்ளூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 1405 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடி, வழிப்பாட்டு தளங்கள், சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 69 பயண வழி மையங்கள் (Transit Booth) அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மேலும் எளிதாக செல்ல முடியாத மையங்களுக்கு 42 நடமாடும் மருத்துவக்குழு மூலம் வீடு தேடி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1516 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிக்காக பல்வேறு சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 6127 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 4320 குழந்தைகளுக்கும் 120 பணியாளர்கள் மூலம் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் நகராட்சி ஆணையர் சுபாஷினி குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அந்நிகழ்வின் போது, நகராட்சி மருத்துவர் ஸ்டெல்லா பிரசன்ன குமாரி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.




















