மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் ஆன்மீக பயணம் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களை, ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவசமாக ஆன்மீகப் பயணம் சென்று வரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அவ்வகையில் மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 12 பக்தர்கள் ஆன்மீகப் பயணத்திற்கு இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .
அவர்கள் அனைவரையும் மயிலாடுதுறை பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து இன்று காலை வேன் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அதிகாரிகள் மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆன்மீக பயணத்தை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து காசிக்கு ரயில் மூலம் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். பின்னர் இம்மாதம் 28ஆம் தேதி மயிலாடுதுறைக்கு பக்தர்கள் வந்தடைவார்கள்.