கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக் கோயிலாகும்.
மேலும் அத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகமாக கூறப்படுகிறது. மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் அத்தல வரலாறு அதனால் அத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சுவாமியே சுவாமிநாதன் எனும் பெயர் கொண்டு போற்றப்படுகிறார்.
அத்தகு பெருமைக்குரிய தலத்தில் ஆங்கில புத்தாண்டினைக் கொண்டாடும் வகையில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. அருள்மிகு சுவாமி நாத சுவாமி பக்தர்களுக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி அளித்தார்.





















