கும்பகோணம், டிச. 19 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், தலைமையில் நடைபெற்றது. அதில் பேரூராட்சி துணைத் தலைவர் உதயா உப்பிலி, திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், திருபுவனம் பேரூராட்சி தலைவர் குமுதவள்ளி கோவிந்தன், செல் அலுவலர் பங்கையர் செல்வி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், காவல் ஆய்வாளர் ராஜேஷ், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அம்முகாமில் திருநாகேஸ்வரம், சன்னாபுரம், அணைக்குடி, சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, ஆகிய 13 அரசுத் துறைகள் கலந்து கொண்டனர்.
இதில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.





















