திருவாரூர், ஆக. 22 –
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை இடித்து விட்டு நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நிறைவுப்பெற்று தற்போது கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய கட்டிடத்தை இடிக்க கலியமூர்த்தி என்ற ஒப்பந்ததாரருக்கு, அரசு விதிமுறைகளின் படி பணி ஆணையினை நகராட்சி நிர்வாகம் வழங்கியது.
மேலும் அவ்வனுமதி ஆணையில் அப்பழையக் கட்டிடம் மற்றும் கட்டிடத்தில் உள்ள பகுதிகளில் உள்ள ஏனைய கட்டிட பயன்பாட்டு கதவுகள் ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி தரை மட்டம் ஆக்கி தரும்படி அதில் உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ஒப்பந்ததாரர் கலியமூர்த்தி நகராட்சி கட்டிடத்தை தரைமட்டமாக இடித்து விட்ட பிறகு, கூத்தாநல்லூர் நகராட்சியின் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தேவா என்பவர் முறைகேடாக இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு கீழ் 20 அடி முதல் 30 அடி ஆழத்திற்கு பாதாளம் போல் தரைமட்டமாக இருந்த இடத்தைத் தோண்டி அதில் மண் மற்றும் மணல் போன்றவற்றை எடுத்து விற்பனை செய்ததாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் மேலும் அதில் எடுக்கப்பட்ட மண் மற்றும் மணலை விற்பனை செய்வதற்காக வேளாண்மையில் ஈடுப்படும் உழவர்களுக்காக அரசு குறைந்த வாடகையில் தரக்கூடிய டிராக்டரை கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் வெங்கடேசன் உதவியுடன் அதனைப்பெற்று அச்செயலுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் இச்செய்தி பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அக் குற்றச்சாட்டுக் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட பொழுது, அதுக்குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும், மேலும் விளக்கம் கேட்டு ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.