கும்பகோணம், ஆக. 15 –
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சர்மிளா என்பவர் சாதிய வன்மத்தோடும் ஆதிக்க சாதியினருக்கு துணை போகும் வழியில் பல்வேறு வகைகளில் ஈடுபட்டு வருவதாகவும்,
மேலும் கடந்த 1 ஆம் தேதி அணைக்கரை அரசு பள்ளி வளாகம் அருகே கல்லூரி மாணவர் அவினாஷ் என்பவரை சாதிய வன்மத்தோடு தாக்கிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு துணைப்போகும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வண்டும் என புகார் தெரிவித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நீலப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது என கூறி அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்த போது., காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கயிற்றால் கட்டபட்டு மறித்ததால், ஆர்ப்பாட்டம் சாலை மறியலாக மாறியது. அதனால் கும்பகோணம் சென்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் காவல் ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யகோரி முழக்கங்களை எழுப்பினார்கள். ஆய்வாளர் இதுப் போன்ற செயல்களில் இனி அவர் ஈடுபடாத வகையில் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பியவாறே மறியலில் ஈடுபட்டனர்.






















