கும்பகோணம், ஆக. 12 –
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இப்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கீர்த்திவாசன், ஜாபர்சாதிக், ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இம் மாரத்தான் போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 700 – க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலையில் உள்ள உத்தமர் காந்தி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
மேலும் இம் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த, மூமணி, லோகேஷ்ராம், அகிலன், ஆகிய மூன்று பேருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கீர்த்திவாசன், ஜாபர்சாதிக், ஆகியோர் கோப்பைகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து இந்நிகழ்வின் நிறைவில் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார், மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.





















