திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பள்ளியில் 100 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் இன்று காலை கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மற்றொரு கேஸ் சிலிண்டரை தனியார் கேஸ் நிறுவனம் மாற்றும் போது, கேஸ் சிலிண்டரிலிருந்து கேஸ் செல்லக்கூடிய பைப்பில் தீ பற்றி எரிந்தது உடனடியாக அங்கு இருந்த சமையல் ஊழியர்கள் தனியார் கேஸ் நிறுவன ஊழியர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் சேர்ந்து, அத்தீயினை அணைத்தனர். மேலும் உடனடியாக மாணவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்புக்கருதி அப்பள்ளியில் இருந்து வெளியேற்றினார்கள்.
தொடர்ந்து அவர்களுக்கு மதியம் விடுப்பு அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் மணி அச்சம்பவம் குறித்து அங்கு விசாரணை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு வந்து உரிய முறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் பகுதியை ஆய்வு செய்தும், பாதுகாப்பினை உறுதி செய்து விட்டு சென்றனர். அச்சம்பவத்தால் அப்பள்ளி அமைந்துள்ள வட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி அடங்கியது.