கும்மிடிப்பூண்டி, ஆக. 05 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில், சி.ஐ.இ.எல் குழுமம் தனது 84 ஆவது கிளையினை தொடங்கியது. மேலும் அதற்கான துவக்க விழா அவ்வளாகத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சி.ஐ.இ.எல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாபா கே.பாண்டியராஜன் உரை நிகழ்த்தும் போது, படித்த இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரித்தார்.
மேலும் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு திறமையான பணியாளர்களை வழங்க சி,ஐ,இ,எல், நிறுவனம் திட்டமிட்டுள்ளது எனவும், இந்தியா உலக அளவில் முக்கிய உற்பத்தி மையமாக நிலைக் நிறுத்திக் கொள்ள தயாராகி வருகின்றதெனவும், இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், சி.ஐ.இ.எல். குழுமம் மூலம் நாடு முழுவதும் உள்ள திறமைமிக்க பணியாளர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளவும், மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தேசிய தொழிற் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இளைஞர்களை அவர்களது எதிர்கால வேலைகளுக்கு தயார் படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் திறன் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவதோடு, திறமைகளை ஒன்றிணைத்து, அதனை துரிதப்படுத்தி, செயல்பாட்டை மேம்படுத்தும் பணியில் சிஐஇஎல் முயன்று வருகின்றது என்றவர், இந்தியாவிலேயே திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.
மேலும், சி.ஐ.இ.எல். நிறுவனம் தமிழகத்தில் 23 இடங்களில் திறன் வளர் பயிற்சி மையங்களை நடத்தி வரும் நிலையில், தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, பொறியியல் படித்த கிராமப்புற மாணவர்களை தேடி அவர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இத் தொழிற்பேட்டையில் ஒரு நாளைக்கு 100பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு திறன் வளர் பயிற்சியை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றவர். பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி மட்டுமல்லாது, தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர பகுதி மீனவர்களுக்காக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் தொழிற்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வின் போது, நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ஆதித்ய நாராயணன் ,முதுநிலை மேலாளர் யேசுதாஸ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.





















