செங்கல்பட்டு, ஜூலை. 13 –
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற தூய்மைக் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், நடை மற்றும் மிதிவண்டி பேரணி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுப்போன்று தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பைக்கூழங்கலை அந்நிறுவன ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் தூய்மைப்படுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற் கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டு பொருட்களை வாங்குவதற்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிப்பைகள் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதப்பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இருவார தூய்மை அனுசரிப்பு எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று துவங்கி எதிர்வரும் 15 ஆம் தேதிவரை அந் நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் அம்மாவட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் கெடார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் 800 க்கும் மேற்றபட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைப்பெற்றது இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நரசிங்கனூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் குன்னத்தூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற இவ்விழாவில் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 1555 க்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்வில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அந்நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே “தூய்மை இந்தியா” குறித்த விரிவான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தினார்கள். மாணவர்களுக்கான கையெழுத்துப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அப்பள்ளிகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை வழங்கினார்கள்.
மேலும் அப்பள்ளிகளின் தூய்மைப் பணிகளுக்காக அந்நிறுவனத்தின் சார்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும், துடைப்பங்களுடன் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகளை வழங்கினார்கள்.
அதுப்போன்று, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் கிராமத்தில் தப்பாட்ட கலைஞர்கள் மூலம் தேச தூய்மையை பற்றி (காற்று, நீர், மண் மாசுபாடு ஆகாமல் பாதுகாப்பதுக் குறித்த ) பிரசாரம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.





























