கொண்டக்கரை, ஜூன். 27 –
திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட கவுண்டர் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்ப கலை சமேத ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்திட அத்திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுற்று, இன்று ஜீரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சியக நடைபெற்றது,
முன்னதாக நான்கு கால பூஜை செய்யப்பட்டு, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கடங்களில் நிரப்பபட்டு, அக்கடங்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவில் விமான கோபுரங்களுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் கோபுர கலசங்களில் அபிஷேகம் செய்திட மகா கும்பாபிஷேகம் இனிதே நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து அப்புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கும், காவல் தெய்வங்களுக்கும், அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் சாமி பிரசாதங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர், செங்குன்றம், சென்னை ,பொன்னேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்களும், சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன், உள்ளிட்டவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை அவ்வூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக திருக்கோயில் விழாக்கமிட்டி மற்றும் அவ்வூர் கிராம மக்கள் சார்பில் இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு கும்ப மரியாதை வழங்கினார்கள்.


















