பாபநாசம்,மே. 15 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசத்திற்கு, மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சரும், முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளருமான இரா.துரைக்கண்ணு திருவுருவச் சிலை திறப்பு விழா முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி திருவுருவச் சிலையினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் அமைச்சர் எளிமையாக வாழ்ந்து வந்தவர். எனவும் மேலும் அவரை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக அணுக கூடிய வகையில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்தவர் எனவும் அப்போது அவருக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் அமைச்சராக இருந்த போது நியாயமான சிபாரிசுகளை மட்டுமே செய்த நல்மனிதராவர் எனவும், மேலும் அவரது திருவுருவச் சிலையை திறப்பதற்கு கூட தடையை ஏற்படுத்தியவர்தான் வைத்தியலிங்கம் என அப்போது குறிப்பிட்டார்.
மேலும், நான் முதல்வராக இருக்கும் போது தந்தையின் சிலையை தாங்கள்தான் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடியவர் அவருடைய மகன் துரை சண்முகபிரபு ஆவார். ஆனால் அப்போது நிறைவேறாத அவரின் வலியுறுத்தலை தற்போது அவர் நினைத்தவாரே இப்பகுதி மக்களின் பேரா தரவோடும், அதிமுகவின் தொண்டர்கள் ஆதரவோடும் முன்னாள் அமைச்சரின் சிலையை தற்போது தான் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களும், அதிமுகவின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து துரைக்கண்ணு மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.























