குடவாசல், ஏப். 06 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம மக்கள் பெரும்பாலும் குடவாசல் பகுதியைத்தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் தங்கள் தேவைக்கருதி அக்கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு குடவாசல் பகுதிக்கு செல்ல குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மர பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், அம்மரப்பாலம் நீண்ட நாட்களாக உடைந்தும், பழுதடைந்தும், மிகவும் ஆபத்தான நிலையில் படு மோசமாகவுள்ளது.
இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச்செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் வரை, ஆபத்தான நிலையில் உள்ள இம்மரபாலத்தின் வழியாகத்தான் எக்காலமாக இருந்தாலும் எந்நேரமாக இருந்தாலும் அவ்வாற்று மரப்பலத்தின் வழியாக கடந்து செல்லும் அவல நிலைதான் தற்போது வரை உள்ளது.
மேலும் வேறுவழிப்பாதை வழியாக செல்லவேண்டுமெனில் 5 முதல் 6 கிலோமீட்டர் சுற்றி தான் அருகில் உள்ள நகரப்பகுதியான குடவாசலுக்கு செல்லக்கூடிய நிலை உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் பெருத்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, இப்பிரச்சினைத் தொடர்பாக ‘சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு எங்களது அடிப்படை, வாழ்வாதரம் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினையாக இருந்து வரும் இந்த ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றி நிரந்திர பாலத்தினை அமைத்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்தாலோ அல்லது அத்திட்டத்தை நிறைவேற்ற தவறினாலோ ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இப்பாலத்தினை கட்டிக் கொள்வோம் என அப்போது அவர்கள் தெரிவித்தனர். மேலும் அதன் பின்பு எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் எங்கள் கிராமத்திற்குள் வாக்குக் கேட்டு யாரும் வரக்கூடாதென்றவாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டிகள்:
1.வீரமணி, கீரனூர்
- கார்த்தி, பருத்திசேரி.





















