கும்பகோணம், ஜன. 06 –
கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து இழந்த சக்தியை ஆதிசேஷன் திரும்ப பெற்றத் தலமாக திகழும், அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தெரு அடைச்சான் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஆருத்ரா தரிசனமாகும். இந்நாளில் சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாளெனவும் கூற்ப்படுகிறது.
மேலும், இது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதையே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம்.
இந்த புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் வீதி உலா நடைபெறுவது வழக்கமாகும். மேலும் இதன் ஒரு பகுதியாக பிரகன்நாயகி சமேத அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாக திகழ்வதாக தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இத்திருக்கோயிலில் ஆதிசேஷன் மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார் எனவும், சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைப்பெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, உற்சவர் நடராஜர் சிவகாமி அம்பாள் சிறப்பு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு சப்பரத்தில் எழுந்தருள தெரு அடைச்சான் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தெரு அடைச்சான் சப்பரத்தின் வடம் பிடித்து இழுத்து மனம் மகிழ்ந்தனர்.























