திருவண்ணாமலை, டிச. 4 –

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான வருகிற 6 ஆம் தேதி பரணி தீபமும், மகாதீபமும் நடைபெறவுள்ளது.

இதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகாதீபம் அன்று  கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் நகராட்சி ஆணையாளர் ரா.முருகேசன் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பாளர் பழனிவேல் கோட்ட கண்காணிப்பாளர் க.முரளி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கிரிவல பாதையில் அமைச்சர் எ.வ.வேலு பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கிரிவலப் பாதையில் 8 இடங்களில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை பக்தர்களின் பயன்பாட்டுக்கு உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட அவர் அடிஅண்ணாமலை ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களுக்கான தங்கும் அறை கட்டப்பட்டுள்ளது. அங்கு கார்த்திகை தீபத்தையட்டி அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் தற்காலிக மருத்துவமனை அமைத்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்ட அவர் சாந்திமலை நிறுவனம் அருகே கிரிவலப் பாதையில் நடைபாதையினை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி தற்போது பழுதடைந்துள்ள பகுதிகளில் பேவர் பிளாக் போடவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here