காஞ்சிபுரம்,அக். 10 –
தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம்நாள் விழா சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்ம குமாரிகள் தியான பயிற்சி நிலைய மையத்தின் அருகே நடைபெற்றது.
நேற்று காலை துவங்கிய நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் குறிப்பிடுகையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் இந்தியா முழுவதும் 250 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு ஆன்மீகத்தை அளித்து மன அமைதி மகிழ்ச்சி அனைத்தையும் மக்களுக்கு வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
மேலும், பிரம்ம குமாரிகள் இயக்கம் அன்பை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகளை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் அன்பு, மகிழ்ச்சி என்ற சாவி நம் கையில் தான் உள்ளது. அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோமோ அதன் மூலமே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் , மூத்த குடிமக்களின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதால் அவர்கள் நினைத்தால் மீண்டும் அளித்த சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அளித்த தீர்ப்பை கண்டு பெருமகிழ்ச்சியடைந்ததாகவும் , மேலும், பூஜை பொருட்களான தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப் பாக்கு இவைகள் அனைத்தையும் இறைவனுக்கு நாம் படைத்தாலும், அனைத்தும் நாம் திரும்ப பெற்றுக் கொள்ளும் நிலையில், கற்பூரம் மட்டுமே தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கும். அக் கற்பூரத்தைப் போன்றே பிரம்ம குமாரிகள் இயக்கம் பொதுமக்களுக்கு அன்பை வழங்குகிறது எனத் தெரிவித்தார்.