கும்பகோணம், செப். 29 –
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற கீரனூர் கொத்தனார் வடிவேல் (28) என்பவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பயணித்த அதே ஊரை சேர்ந்த கொத்தனார் ராஜேஷ்குமார் (27) என்பவர் படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து குறித்து தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோயில் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வடிவேல் (28) இவர் மஸ்கட் நாட்டில் கொத்தனாராக பணி செய்து வருகிறார் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக ஊர் திரும்பிய நிலையில், இன்று கீரனூர் கிராமத்தில் நேர்ந்த துக்க நிகழ்வு ஒன்றிற்கு, இன்று காலை கும்பகோணத்திற்கு வந்து மாலை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருக்கும் போது சாக்கோட்டை பகுதியில், நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராஜேஷ்குமார் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வடிவேல் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். துக்க வீட்டிற்கு மாலை வாங்கிக் சென்று திரும்பும் போது, எதிர்பாராவிதமாக நடந்த விபத்தில் சிக்கி, வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 5 நாட்களிலேயே வாலிபர் உயிரிழந்த சம்பவம் கீரனூர் கிராமத்தில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.






















