திருவாரூர், செப். 27 –
திருவாரூர் விளமல் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணிளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருவாரூர் பணிமனைக்கு சொந்தமான 2 பேருந்துகளும், மயிலாடுதுறை பணிமனைக்கு சொந்தமான ஒரு பேருந்து என மொத்தம் 3 பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வாழக்கு பதிவு செய்து பேருந்து கண்ணாடிகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அச்செயலில் ஈடுப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சாகுல் ஹமீது, அஹமத்துல்லா, முகமது, ஹாஜா நவாஸ் ஆகிய நான்கு பேர் எனத் தெரிய வந்தது அதனைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















